தமிழின அழிப்பு நினைவகம் அமைப்பதற்கான திட்டம் ஒட்டாவாவில் ஆரம்பம்_May12_2026
தமிழின அழிப்பு நினைவகம் அமைப்பதற்கான திட்டம் ஒட்டாவாவில் ஆரம்பம்
மே 12, 2026, ஒட்டாவா.
தமிழின அழிப்புக் கல்வி வாரத்தின் தொடக்க நாளான இன்று, ஒட்டாவா தமிழ் ஒன்றியம் (OTA) மற்றும் தமிழின அழிப்பு நினைவகம் (TGM) ஆகிய அமைப்புக்கள் இணைந்து ஒட்டாவாவில் ஒரு தமிழின அழிப்பு நினைவுச் சின்னத்தை அமைக்கும் திட்டத்தினைத் தொடங்குவதாக அறிவிக்கின்றோம். இந்த அறிவிப்பானது, பிராம்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவுச்சின்னம் திறந்து வைக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவுற்ற நிலையிலும், தமிழீழத்தில் வடுக்கோட்டைத் தீர்மானத்தின் 50வது ஆண்டு நிறைவுடனும் வெளிவருவது கவனிக்கத்தக்கது.
தமிழின அழிப்பு நினைவு நாள் மற்றும் தமிழின அழிப்புக் கல்வி வாரம் என்பன, நீதி கோரும் தமிழ் மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வலியுறுத்துகின்றன. 2009ஆம் ஆண்டு, டொராண்டோ, மாண்ட்ரியல், கொர்ன்வால் ஆகிய இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கனேடிய தமிழர்கள் ஒட்டாவா தமிழர்களுடன் பாராளுமன்றம் முன் தோளோடு தோள் நின்று, இன அழிப்புப் போரை நிறுத்தும்படி உலகை வலியுறுத்தினர். கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கனடிய தமிழ் மக்களுக்கு ஆதரவாக உழைத்தனர். சிறீலங்காவின் அட்டூழியங்களையும் தமிழின அழிப்பினையும் தடுக்க முடியாவிட்டாலும், கொழும்பில் இடம்பெற்ற பொது நலவாய மாநாட்டை கனடா பின்னர் புறக்கணித்தது. மேலும், 2015இல் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானத்தை இணை-ஆதரவு செய்ததோடு, 2022இல் மே 18ஐ தமிழின அழிப்பு நினைவு நாளாக ஒருமனதாக அங்கீகரித்து, 2023ல் அதனை முறைப்படி அறிவித்தது. மேலும், சிறீலங்காவின் முன்னாள் அதிபர்களுக்கு பொருளாதாரத் தடைகள் விதித்தது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கனடா தனது கொள்கையினை வெளிப்படுத்தியது.
பிராம்டன் நினைவுச்சின்னத்தை முன்மாதிரியாகக் கொண்டு, எளிமையான மற்றும் சக்திவாய்ந்த வடிவில் உருவாக்கப்படும் ஒட்டாவா நினைவுச்சின்னம், “திறந்த புத்தகம்” வடிவமைப்புடன் உறுதியான அடித்தளத்தின் மீது அமையவிருக்கிறது. அதன் மையத்தில் தமிழீழத் தமிழர்களின் தன்னாட்சி உரிமையினைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழீழ வரைபடம் இருக்கும். இது நம் மக்களின் வரலாற்றையும் அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்புப் போரையும் கனடாவின் தலைநகரில் நிரந்தரமாகப் பதிய வைக்கும்.
இந்த நினைவுச்சின்னம்:
- தமிழர்களின் 1948–2009 வரையிலான மறைக்கப்பட்ட வரலாற்றைத் தெளிவாகச் சொல்லும் கல்வி மையமாகும்.
- தமிழரின் துயரத்திற்கு ஒரு வடிகாலாகவும் மனித உரிமைப் போராட்டாங்களுக்கு உந்து சக்தியாகவும் விளங்கும்.
- தமிழின அழிப்பு மறுப்பு மற்றும் மறதி அரசியலுக்கு எதிராக நீதிக்கான வழிகாட்டியாக இருக்கும்.
இந்த நினைவுச்சின்னம், உண்மைக்கும் நீதிக்குமான தேடலை தற்காலிக இயக்கமாக அல்லாமல் நிரந்தர மரபாக மாற்றும் வாய்ப்பை அளிக்கும். இந்தக் கனவை நனவாக்கும் முயற்சியில் ஒன்றுபட்டுச் செயற்படவும், பொருளாதார மற்றும் ஆதரவு உதவியினைச் செய்யவும், சமூக உறுப்பினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
ஒட்டாவா தமிழ் சங்கம் (OTA)
தமிழின அழிப்பு நினைவகம் (TGM) – https://tamilgenocide.com
info@ottawatamilassociation.ca | www.ottawatamilassociation.ca
###
