November 14, 2025 —
அந்தந்த காலத்தின் வரலாற்று நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் மாபெரும் பொறுப்பை இலக்கியத்தின் பக்கம் விட்டுச் சென்றிருக்கிறது காலம். முதல் உலகப்போரில் ஆரம்பித்து ஏராளமான இன அழிப்புகள் உலகெங்கிலும் நடைபெற்றுள்ளன. சாட்சியங்களற்ற போர் என வர்ணிக்கப்பட்ட ஈழ இனப்படுகொலையின் கொடூரமான பக்கங்களை, மனித உரிமை மீறல்களை சாட்சியங்களாக/ஆவணங்களாக எழுத்துகள் தான் சுமந்து நிற்கின்றன. அந்தவகையில் யுத்தச்சூழலும் இனவாதமும், தமிழின் இலக்கிய முகத்தையே மாற்றியிருக்கிறது. போர் நிலங்கள் இதுவரை தமிழ் இலக்கியம் உணராத கொடூர அனுபவங்களை முன்வைக்கின்றன. யுத்த நெருக்கடிகளில் கிடந்து உயிருக்காக அவர்கள் பட்ட அவமானங்கள், வேறொரு இனம் சந்தித்திராத ஒன்று. யுத்தச்சூழலுக்குள் கடும் இன்னல்களைக் கண்ட தமிழினத்திலிருந்து இலக்கியமும் எழுந்து வளர்ந்துள்ளது.
சொந்த நிலத்தில் அன்னியப்படுத்தப்பட்டும், ஒதுக்கப்பட்டும், துரத்தப்பட்டும் ஒவ்வோரு நிலத்தின் நிலை வாசலில் ஏதிலிகளாக நிற்கும் ஈழஅகதி மக்களின் துயரங்கள் ஒருபுறம்; அடைக்கலம் என்கிற பெயரில் முகாம்களில் அடைப்பட்ட அடிமை வாழ்வில் கலவரப்படுத்தும் மனிதர்களை அடையாளப்படுத்தியும், முகாமில் சனங்கள் எதிர்கொள்ளும் துயர் சூழ் வாழ்க்கை மறுபுறம் என யுத்தகளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்களுக்குச் சொல்ல ஏராளமான கதைகள் இருக்கின்றன.
பேரவையின் நவம்பர் மாத இலக்கியக்கூட்டத்தில் “போர் நிலம் பேசிய கதைகள்” என்ற தலைப்பில் ஈழ இலக்கியங்கள் குறித்து உரையாற்ற ஈழத்திலிருந்து கவிஞர்/எழுத்தாளர் தீபச்செல்வனும், எழுத்தாளர் சர்மிலா வினோதினியும் நம்மிடையே கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஈழப்போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதி வருபவரும், ஈழநிலத்தின் வாழ்வையும், வலிகளையும், உரிமைகளையும் தன் கவிதைகளில் தொடர்ந்து எழுதி வரும் சமகாலத் தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியுமான திரு தீபச்செல்வன் “எழுத்து எனக்கு ஆயுதம்” என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறார்.
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம், பாழ் நகரத்தின் பொழுது, ஈழம் மக்களின் கனவு, ஈழம் போர்நிலம், கிளிநொச்சி போர்தின்ற நகரம், எதற்கு ஈழம்?, எனது குழந்தை பயங்கரவாதி, எனது நிலத்தை விட்டு எங்குச் செல்வது? நான் ஸ்ரீலங்கன் இல்லை, பயங்கரவாதி, பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல போன்ற பல நூல்களை தீபச்செல்வன் எழுதியிருக்கிறார். இவர் எழுதிய “நடுகல்” நாவல், சமகாலத் தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சமீபத்தில் ‘சயனைட்’ என்ற இவரது நாவல் வெளிவந்திருக்கிறது. தன்னுடைய படைப்புகளுக்காக பல்வேறு விருதுகளையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார்.
போர் நிலங்களில் பெண்கள், குழந்தைகளின் துயரங்கள் சொல்லி மாளாதவை. இதுவரை ஈழ இலக்கியங்களில் பேசப்பட்ட பெண்கள், குழந்தைகளின் துயரங்கள் குறித்தும், ஈழ நிலத்தில் எழுத வந்த பெண் எழுத்து குறித்தும் “ஈழப்போர் நிலத்தில் பெண்ணெழுத்துகள்“ என்ற தலைப்பில் எழுத்தாளர்/ஊடகவியலாளர் திருமிகு சர்மிலா வினோதினி அவர்கள் உரையாற்றவிருக்கிறார். சர்மிலா அவர்களது அகதியின் நாட்குறிப்பு நூல் சமீபத்தில் வெளியானது. மேலும் இராப்பாடிகளின் நாட்குறிப்பு, மகளின் வாசம் என்ற இருகவிதைத் தொகுப்புகளும், மொட்டைத்தலையும் முகமாலைக் காத்தும் என்ற சிறுகதைத்தொகுதியும் வெளியாகி இருக்கிறது. சிங்கள மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட இத்தொகுப்பு இலங்கை அரசின் சாகித்திய விருதைப் பெற்றுள்ளது.
போர் நிலம் பேசிய கதைகள் பற்றி அறிந்து கொள்ள வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
நாள்: நவம்பர் 15, சனிக்கிழமை
அமெரிக்க கிழக்கு நேரம்: காலை 11 மணி
இந்திய/இலங்கை நேரம்: இரவு 9.30 மணி
YT Live: http://fetna.org/ytlive
FB Live: http://fetna.org/fblive

###
